Pages

Tuesday, November 15, 2011

கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எனது ‘அன்னை’ நூலுக்காக அளித்த முன்னுரை


கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எனது ‘அன்னை’ நூலுக்காக அளித்த முன்னுரை 

கண்காட்சியில் இருந்த தனது அன்னை தெரசா ஓவியத்தின் கீழ் எழுதி வைக்க இரண்டு மூன்று சொற்கள் தேவை என்றார் ஓவியர் புகழேந்தி. ‘தாய்மை என்பது கருப்பையில் அல்ல’ என்று எழுதிக் கொடுத்தேன்.
உலகத் தாயாக வாழ்ந்த அன்னை தெரேசா இப்போது இலக்கியர் சேவியரின் சொல்லோவியமாய் உருப்பெற்றிருக்கிறார்.
முத்துக்களாய் உதிரும் சேவியரின் எழுத்துக்களில் பைபிள் முகம் காட்டுகிறது.
சொற்களின் சொரிவு
நயம் கொஞ்சும் பைபிள் நடை
இது
அன்னை தெரசா வரலாறல்ல – அன்னை தெரேசா இலக்கியம்.
ராகங்கள் ஒன்று கூடி
ஓர்
புல்லாங்குழலைப் புனைந்தன
தெரேசா அன்னை எப்படி உருவானாள் என்பதை சேவியர் விளக்கும் தேன் வரிகள் இவை.
இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிருத்துவ பெண் துறவிகள் ஆற்றிய மாந்தநேய அருட்பணிகளால் உருவாக்கப்பட்ட இனிய புல்லாங்குழல் தெரேசா அன்னை என்கிறார் சேவியர்.
இளம் அகவையிலேயே மாந்த நேயம் அன்னையின் இன்னுயிர் ஆயிற்று.
சேவியர் சொல்கிறார்
தெரேசாவின்
நித்திரைகளிலெல்லாம்
இயேசு
ஏழைச்சிறுவர்களாய்
தெரிந்தார்.
உலக மாந்தர் மீது அன்னை தெரேசா வைத்த பாசம் – குடும்பச் சுவர் தாண்ட உயரிய மாந்த நேயமாய் விரிகிறது.
‘உலகத்தைக்
குடும்பமாய்ப் பார்த்தபின்
அன்னைக்கு
குடும்பம்
உலகமாய் இருக்கவில்லை’
என்கிறார் சேவியர்.
அன்னையின் பேரன்பை ஆசைதீர அள்ளிப் பொழிகிறது சேவியர் தமிழ்.
அழகு அல்ல அன்பு தான் அன்னையின் உலகம் என்கிறார்
‘அருவித் தண்ணீர்
அழகாய் விழும்
குவளைத் தண்ணீரே
தாகம் தீர்க்கும்’
அன்பைப் பற்றிய சேவியரின் எழுத்துக்கள் நெஞ்சை அசைக்கின்றன.
உங்கள் அன்பு
குறைவு படப் போவதில்லை.
எத்தனை நுரையீரல்கள்
சுவாசித்தாலும்
காற்று வற்றிப் போவதில்லை.
இலக்கியர் சேவியர் பேரன்பின் ஒளி கொட்டும் தெரேசா நிலவைத் தமிழ் நெஞ்சங்களில் இருத்துகிறார்.
பாதையோர ஏழையைப்
பார்த்தால்
ஆகாயம் பார்த்து
அகன்று போகாதே…
குறைந்த பட்சம்
ஓர்
புன்னகையைக் கொடுத்துப் போ
அன்னை – சேவியர் இலக்கியத்துக்கு ஓர் அளவுகோல்
எழுத்து நடையே அவர் எழில்
சொற்களின் புனைவு அல்ல – சொற்களின் பொழிவு
நெஞ்சில் இறங்கும் தமிழ்
இலக்கியர் சேவியரையும், அருவி பதிப்பகத்தாரையும் இனிது வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment